feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

Sunday, 18 October 2009

மனிதர்களும் மாசுகளும்


ஒரு வீடு அல்லது வாகனம் அல்லது அலுவலக அறை உயர்தர மின்கருவிகளின்மூலம் குளிரூட்டப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் காற்றின் வெப்ப அளவு என்ன என்பதை நினைத்துப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. உள்ளே இருக்கும் வரையில் வெப்பத்திலிருந்து தப்பிப்பதுமட்டுமே நம்முடைய ஆர்வமாக இருக்கிறது. வெளியேறும் வெப்பத்தின் அளவு கிட்டத்தட்ட சாதாரண வெப்பத்தைப்போல மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் என்னும் செய்தி ஆச்சரியத்தைத் தரலாம்.

Man And His Environment வெப்பக்காற்றுப்போக்கியின் அருகே சில நொடிகள் நின்று பார்த்தால் அந்தச் சூட்டை உணரமுடியும். தாங்கிக் கொள்ளவே முடியாத அளவு கடுமையாக இருக்கும். ஒருசிலர் குளிர்ந்த சூழலில் வசதியாக இருப்பதற்காக, வெளியே இருப்பவர்களால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாத அளவு வெப்பத்தை எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெளியேற்றுகிற சூழல்தான் இன்று எல்லா இடங்களிலும் நிலவுகிறது.

எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் ஏற்கனவே வெப்பத்தில் வெந்து கொண்டிருப்பவர்கள்மீது இந்த வெப்பத்தின் கடுமையும் சேர்ந்துகொள்கிறது. மாசுகளையும் பெருகி அளவற்றுப்போன ஊரின் வெம்மை தொடக்கத்தில் நகரவெம்மையாக விரிவடைந்து, பிறகு தேசவெம்மையாகப் படர்ந்து, இன்று அண்ட வெம்மையில் வந்து நிற்கிறது.

அண்ட வெம்மை அதிகரிப்பதைப்பற்றியும் அண்ட வெளித் தூய்மையைப்பற்றியும் இன்று வாய்திறந்து பேசாத நாடே இல்லை. அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டது. தூய உயிர்க்காற்று என்பது கூட என்றாவது ஒரு காலத்தில் விற்பனைக்குரிய பொருளாக மாறிவிடுமோ என்று அச்சமாக உள்ளது. அண்ட வெம்மையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிற புள்ளி விவரங்களை ஒவ்வொரு நாடும் கையில் வைத்துக்கொண்டு தீர்வுகாண முடியாமல் இன்று தத்தளிக்கிறது.

ஒவ்வொரு நகரிலும் வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழற்சியால் துவண்டுபோன நுரையீரல்களுடன் மருத்துவமனைகளின் வாசல்களில் நிற்பது தினந்தினமும் பார்க்கக்கூடிய காட்சியாக உள்ளது. உறக்கமற்ற இவர்களுடைய இருமல்களாலும் பெருமூச்சுகளாலும் இரவுகள் நிரம்பிவழிகின்றன. இன்றைய தேதிக்கு இந்த அளவோடு சுற்றுச்சூழல் மாசுகளின் விளைவுகள் நின்றுள்ளன. நாளை இது இன்னும் விரிவடையலாம். தண்ணீர் வளம் உடனடியாகப் பாதிக்கப்படக்கூடும். அதன் விளைவாக பயிர்வளமும் பாதிக்கப்படக்கூடும். நல்ல பயிர்களை விளைவிக்க முடியாத மலட்டுத்தனத்தால் நிலவளமும் பாதிக்கப்படக்கூடும். தாறுமாறான கடல் கொந்தளிப்புகளும் புயல்களும் பஞ்சங்களும் வெள்ளங்களும் உயிரையே பலிவாங்கத்தக்க நோய்களும்கூட அடுத்தடுத்து உருவாகலாம். நம் வாழ்வின் ஆதாரங்களான நீர், பயிர், நிலம் என ஒவ்வொன்றையும் பாதிப்படையச் செய்தபிறகு நாம் எதைநோக்கி நடக்கப்போகிறோம்? மரணத்தை நோக்கியா? அல்லது வாழ்வைநோக்கியா?

வாழ்வைப்பற்றிய பார்வையில் மாபெரும் மாற்றங்கள் வந்துவிட்டதாகச் சொல்லப்படும் இன்றும்கூட கட்சித் தலைவர்களையும் அதிகாரிகளையும் வரவேற்க ஏராளமான வாகனங்கள் ஊர் எல்லைக்குச் செல்கின்றன. வருகையை முடித்துக்கொண்டு ஊர் திரும்பும்வரை அவர் களோடேயே நகர் முழுக்க சுற்றிச்சுற்றி அலைகின்றன. எவ்வளவு புகை. எவ்வளவு அழுக்கு. எவ்வளவு எரிபொருள். இதைப்பற்றி ஏன் எந்தத் தலைவரும் ஒருவித கட்டுப்பாட்டையும் விதிப்பதில்லை என்பது புரியாத புதிர். வாகனம் என்பது செல்வாக்கின் படிமமாக இன்று பார்க்கப்படுகிறது. வாகன எண்ணிக்கை என்பது ஒரு வகையில் செல்வாக்கின் பரிமாணம். அந்தப் படிமத்தில் திளைக்க எண்ணுகிற மனப்போக்கின் விளைவுகளை ஒருகணமேனும் திளைக்க பார்க்கத் தொடங்கினால் ஒருவேளை அவர்களுடைய அணுகுமுறை மாறக்கூடும்.

எழுபதுகளில் மக்கள்தொகை ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோது, குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதமாக நடைபெற்ற பிரச்சாரங்களை நினைத்துப் பார்க்கலாம். நாம் இருவர் நமக்கு இருவர் என்பதிலிருந்து ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்பதுவரை ஏராளமான வாசகங்களைக் கேட்டோம். கால் நூற்றாண்டுக்குப் பிறகு இன்று யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் சுயமான கட்டுப்பாடு உடையதாக ஒவ்வொரு குடும்பமும் மாறிவிட்டது.

மக்கள் தொகைப் பிரச்சனைக்குப் பதிலாக இன்று நம்முன் அச்சமூட்டும்வகையில் வளர்ந்து நிற்பது சுற்றுச்சூழல் மாசுப் பிரச்சனை. இந்தச் சூழல்மாசுகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள சில திட்டங்களை வகுத்துப் பின்பற்றவேண்டியது காலத்தின் கட்டாயமாக இன்று உள்ளது. குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் போலவே சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதமாக நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. தகவல் ஊடகங்கள் வழியாக மாசுக்கட்டுப்பாடு பற்றி எங்கெங்கும் அழுத்தமான பிரச்சாரங்கள் பரவவேண்டியது அவசியம்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வாகனம். அதற்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட வேண்டும்.

ஒரு வாகனம் பயன்படுத்தக்கூடிய எரிபொருளின் அதிகபட்ச அளவு தீர்மானிக்கப்படவேண்டும். ஒரு குடும்பம் அல்லது ஒரு அலுவலகம் ஒரு குளிர்சாதனப்பெட்டியை மட்டுமே பயன்படுத்தலாம். மக்களிடையே இவை விதிகளாக அல்ல, பழக்கமாக படியவேண்டும். இது ஒரு சின்ன ஆலோசனை மட்டுமே. இப்படி ஏராளமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு விரைவாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். பின்பற்றப்படவும் வேண்டும். மாசு உற்பத்திக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கக்கூடிய நம்முடைய முக்கியமான கடமை இது. இந்த நடைமுறை தாமதப்படுமெனில் மாசு உற்பத்திக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கூட்டம்கூட்டமாக பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இயலாமல் போய்விடும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு. இந்திய நகரங்களின் நடைபாதை ஓரங்களிலும் புறநகர் விளிம்புகளிலும் வசிக்கிற மக்களின் எண்ணிக்கை இன்று பல கோடிகளைத் தாண்டும். மொத்த மக்கள்தொகையில் பத்து முதல் பதினைந்து விழுக்காடு மக்களின் தினசரி வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது. ஒவ்வொரு நாளும் வாகனப் புகைக்கும் ஆலைக் கழிவுப் புகைக்கும் இடையேதான் இவர்கள் சுவாசிக்கிறார்கள், நடக்கிறார்கள், உறங்குகிறார்கள். மாசுகள் உருவாக்கத்துக்குக் காரணமானவர்கள் யாரோ ஒரு சிலர். மாசுப்பெருக்க நோய்களுக்குப் பலியாகி உயிரிழப்பவர்கள் வேறு யாரோ ஒருசிலர். இது என்ன சமூகம் அறம்?

மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டங்களை அறிவிப்பத்திலும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதிலும் அரசுக்குப் பல தயக்கங்கள் இருக்கக்கூடும். அதிகாரம், தேர்தல், வாக்கு, செல்வாக்கு, கட்சி நிதி என ஏதேதோ கணக்குகள் அவர்கள் கைகளைக் கட்டுப்படுத்தலாம். மெல்லக் கொல்லும் நஞ்சென பரவிக்கொண்டிருக்கும் சூழல் மாசுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாமே ஒரு சில தீர்மானங்களை வகுத்து கண்டிப்பாகச் செயல்படுத்தத் தொடங்கவேண்டும். எந்தச் சட்டமும் நம்மை வழிநடத்தத் தேவையில்லை மானுட குலத்தின் மீதான அக்கறையே நம்மை வழிநடத்தும் மாபெரும் சக்தியாக இருக்கவேண்டும்..

அயல்நாட்டுத் துணிகள் மீதான எதிர்ப்பை காந்தியடிகள் ஆங்கிலேயர் எதிர்ப்பாகத்தான் அறிவித்தார். அது ஓர் அடையாளம் மட்டுமே. அந்த அறைகூவலைக் கேட்டு இந்தத் தேசத்து மக்கள்தான் தம் வீடுகளில் சேகரித்து வைத்திருந்த அயல்நாட்டுத் துணிகளைக் கொண்டுவந்து நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தினார்கள். அந்த ஆவேசம் மற்றும் அக்கறையின் கனலை இன்றும் நம் நெஞ்சில் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை உணர்த்த சூழல் மாசுகளுக்கு எதிரான திட்டங்களையும் நாம் நிறைவேற்றவேண்டும்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வாகனம். ஒரு வாகனத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான எரிபொருள். ஒரு குடும்பத்துக்கு ஒரு குளிர்சாதனப்பெட்டி. இது ஒரு தொடக்கம்தான். இத்திசையில் இன்னும் வெகுதொலைவு நடந்தோமெனில் நம் தேசத்தில் மாசற்ற சூழலை உருவாக்கமுடியும்.
.

No comments: